உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொத்தனார் வெட்டி கொலை உடலை குட்டையில் வீசிய கொடூரம் பண்ருட்டி அருகே பயங்கரம்

கொத்தனார் வெட்டி கொலை உடலை குட்டையில் வீசிய கொடூரம் பண்ருட்டி அருகே பயங்கரம்

பண்ருட்டி:பண்ருட்டி அருகே கொத்தனாரை வெட்டி கொலை செய்து, உடலை குட்டையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கட்டியாம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் கார்த்திக்,30; கொத்தனார்; இவரது மனைவி மாலதி, 26; இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 15ம் தேதி கார்த்திக், அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் மது அருந்தி விட்டு அருகில் உள்ள சொக்கநாதன்குட்டை அருகில் துாங்கினார். அன்றிரவு வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இந்நிலையில் நேற்று காலை சொக்கநாதன்குட்டையில் கார்த்திக் உடல் மிதந்தது. தகவலறிந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக்கின் கழுத்தில் 3 வெட்டு காயங்கள் இருந்தது. எஸ்.பி.ஜெயக்குமார், டி.எஸ்.பி.ராஜா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில், கார்த்திக்கை கொலை செய்து, வேட்டியில் கல்லை கட்டி குட்டையில் வீசியது தெரியவந்தது. தனிப்படை போலீசார், கார்த்திக்குடன் மது அருந்திய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி