மாட்டு தொழுவமானது நெல்லிக்குப்பம் பஸ் நிலையம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், 2005ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா பஸ் நிலையம் கட்ட ரூ. 1 கோடி நிதி ஒதுக்கினார். பணி அப்போது முடியாததால், அடுத்த வந்த தி.மு.க., ஆட்சியில் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.ஒரு சில நாட்கள் மட்டுமே பஸ்கள் உள்ளே சென்றன. வழி குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பாக கூறி, பஸ் நிலையத்திற்குள் பஸ் செல்லவில்லை. அதுமுதல் பஸ் நிலையம் பயன்பாடின்றி உள்ளது. அதிகாரிகள் பலரும் பார்வையிட்டு செல்வதோடு சரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பஸ் நிலையம் செயல்படாவிட்டாலும், நகராட்சி சார்பில், பஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்திற்குள் அங்குள்ள 18 கடைகளில் 3 கடைகள் மட்டுமே செயல்படுகிறது.இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை பெய்துவரும் நிலையில், சுற்றுபுற பகுதியை சேர்ந்வர்கள் தங்களின் மாடுகளை பஸ் நிலைய வளாகத்தில் கட்டி வருகின்றனர்.