தொகுப்பு வீடுகள் இடியும் அபாயம் சாத்துக்கூடல் கீழ்பாதி மக்கள் அச்சம்
விருத்தாசலம் : தொடர் மழையால், சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில் ஓடை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து, தேங்கி நிற்பதால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில் ஆயிரகணக்கானோர் வசிக்கின்றனர். இவ்வழியாக செல்லும் சின்ன ஓடையில் இருந்து அதிகளவு மழைநீர் வெளியேறி புது காலனி அம்பேத்கர் நகரில் தேங்கியது. தொடர் மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் வீட்டு உபயோகப் பொருட்கள், துணிகள் நனைந்தன.மேலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரை, சுவர்கள் விரிசல் விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மழைநீர் வடிந்தால் மட்டுமே மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும்.பாதிக்கப்பட்ட பகுதியை தாசில்தார் உதயகுமார், ஊராட்சி தலைவர் சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டனர். மழைநீர் தேங்கிய பகுதியில் வசிப்போருக்கு உணவு வழங்கப்பட்டது.இரண்டு நாட்களுக்கு மேலாக தேங்கிய மழைநீரில் மக்கள் வசித்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வட்டார சுகாதாரத் துறையினர் கிராம மக்களுக்கு பரிசோதனை செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.