குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகம் முற்றுகை
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.சிறுபாக்கம் அடுத்த ரெட்டாக்குறிச்சி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள, தெற்கு தெரு, கிழக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வசதி இல்லை. இது குறித்து மங்களூர் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை.இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வராததால், பின்னர் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.