| ADDED : செப் 13, 2026 04:41 PM
விருத்தாசலம்: கொள்முதல் நிலையத்தில் துாற்றாமல் நெல் பிடித்த குற்றச்சாட்டு தொடர்பாக மூவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகளிடம் முறைகேடாக பணம் பெறப்படுகிறது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதுபோல், விருத்தாசலம் அடுத்த தேவங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில், நாகை மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி தலைமையிலான விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, நெற்பயிரை முறையாக துாற்றாமல் கொள்முதல் செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பட்டியல் எழுத்தர் ராஜசேகர் உட்பட உதவியாளர்கள் மூவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 21 மூட்டைகள் இருந்ததால், 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.