மாணவர்களுக்கு கல்விக்கடன் கல்லுாரி முதல்வர்களுக்கு பயிற்சி
கடலுார்:கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது குறித்து கல்லுாரி முதல்வர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பின், அவர் பேசுகையில், 'பொருளாதார காரணங்களால் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் கல்விக் கடனுதவி வழங்கப்படுகின்றன. பேராசிரியர்கள் தங்கள் கல்லுாரியில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலையை கண்டறிந்து வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெற உதவி செய்ய வேண்டும். கடனுதவி பெற தேவையான சான்றிதழ்களை கல்லுாரியில் சிறப்பு முகாம் நடத்தி பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் கல்லுாரி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைய உறுதுணையாக இருக்க வேண்டும்' என்றார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜ், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.