நிரம்பியது வீராணம் ஏரி
சேத்தியாத்தோப்பு:கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் துவங்கி, சேத்தியாத்தோப்பு பூதங்குடி வரை 14 கி.மீ., நீளம், 5 கி.மீ., அகலம் கொண்டது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. 1,465 மில்லியன் கன அடி. இந்த ஏரியின் வாயிலாக 50,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதத்தில் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம், கீழணை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தடைகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன், பெய்த கனமழையால் ஏரி நிரம்பியது. பாதுகாப்பு கருதி, கடந்த 13ம் தேதி வெள்ளியங்கால் ஓடை, பூதங்குடி வி.என்.எஸ்., மதகுகளை திறந்து விட்டனர்.ஏரியிலிருந்து மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு, 73 கன அடி தண்ணீரை சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பி வருகிறது.கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. அதனால், கோடையில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் தேவையை கருதி, கடந்த 24ம் தேதி வெள்ளியங்கால் ஓடை, பூதங்குடி வி.என்.எஸ்., மதகுகள் அடைக்கப்பட்டன. தற்போது ஏரியின் மொத்த கொள்ளளவிற்கு நீர் இருப்பு வைத்து பராமரித்து வருகின்றனர்.