மேலும் செய்திகள்
அடிக்கடி மின்தடை மக்கள் அவதி
22-Sep-2024
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் திடீர் மழைக்காரணமாக மின்தடை அதிகரித்து வருவதால் பொது மக்கள் தொழிற்கூடங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.கடலுார் மாவட்டத்தில் பகலில் அதிகளவு வெப்பமும், இரவில் மழையும் பெய்து வருகிறது. தொடர்ந்து ஒரு வாரகாலமாக இதே நிலை நீடித்து வருகிறது. இதனால் மின்சார ஒயர்களை தாங்கி நிற்கும் இன்ஸ்லேட்டர்கள் பல இடங்களில் வெடித்து மின் தடையை ஏற்படுத்துகின்றன. மின்வாரிய ஊழியர்களால் உடனடியாக பழுது ஏற்பட்டுள்ள இடத்தை கண்டறிவதில் நீண்டநேரம் பிடிக்கிறது.இரவு நேரங்களில் பல மின்கம்பங்கள் நெல் வயல் போன்ற இடங்களில் இருப்பதால் உடனடியாக சரி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் இரவு மின் தடை ஏற்பட்டால் மறுநாள் காலை தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதன் விளைவாக அக்கிராமம் முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது.கடலுார் மாநகரத்தில் மின்கேபிள் புதைக்கப்பட்ட பின்னர் மின் தடையே ஏற்படாது என மின்வாரியம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக இப்போதுதான் அதிகளவு மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மஞ்சக்குப்பம் பகுதியில் தான் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் நள்ளிரவு, அதிகாலை என எந்த நேரமும் மின் தடை அதிரித்து வருகிறது. பழுது அகற்றி மீண்டும் மின்சப்ளை கொடுப்பதற்கு அதிகளவு நேரமாகி விடுகிறது.கடலுார் மாநகரம் கிரிட் சப்ளை உள்ள இடத்திலேயே இந்த நிலை என்றால் கிராமப்பகுதிகளுக்கு செல்லும் ஃபீடரில் எப்போது வரும் என்று சொல்லவே முடியாது. மின்தடை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு செல்வதில்லை. மின் தடை குறித்து அதிகாரிகளிடம் புகார் சொன்னால் கூட, மின்தடையா, எனக்கு தெரியாதே என பதில் அளிக்கின்றனர்.எனவே அதிகரித்து வரும் மின் தடையால் பொது மக்கள் மட்டுமின்றி தொழிற்கூடங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே மின்தடை நேரத்தை குறைக்க மின்வாரிய அதிகாரிகள் முன் வரவேண்டும்.
22-Sep-2024