பங்கு ஈவு தொகை எப்போது சங்க உறுப்பினர்கள் எதிர்பார்ப்பு
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. மஞ்சக்குழி, ஆதிவராகநல்லுார், பு.முட்லுார், தச்சக்காடு, அருண்மொழிதேவன், அரியகோஷ்டி, பெரியகுமட்டி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 5,000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு, விவசாய உறுப்பினர்களுக்கு அங்கத்தினர்களுக்கு, பயிர்க்கடன், நகைக்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கப்படுகிறது. வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லாபத்தில் இயங்கி வருவதால், ஒவ்வொரு ஆண்டும் விவசாய உறுப்பினர்களுக்கு பங்கு ஈவு தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டு காலமாக பங்கு ஈவு தொகை வழங்காததால் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பங்கு ஈவு தொகை முறையாக வழங்கினால் விவசாய உறுப்பினர்கள் தாங்கள் வாங்கிய கடனை கட்ட முன்வருவார்கள். எனவே, பங்கு ஈவு தொகைக்கு, வட்டியுடன் சேர்த்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.