மருதம் பூங்கா பணிகள் நின்று போன அவலம் மீண்டும் துவங்குவது எப்போது?
கடலுார்: கடலுார் நகரில் கலெக்டர் அலுவலகம் அருகே மருதம் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டியதோடு பணிகள் துவங்கப்படாத நிலையில், எப்போது பணிகள் துவங்கப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த, 2021ம் ஆண்டு அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருக்கும்போது, கலெக்டர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் அருகே கடலுார் பஸ் நிலையம் வேண்டும் என நகர் நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதனை ஏற்று கடலுார் கலெக்டர் அலுவலகம் அருகே, 25 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக பஸ் நிலையம் அமைக்கும் பணி திடீரென நின்று போனது. அதைத்தொடர்ந்து வந்த தி.மு.க., அரசு கடலுார் பஸ் நிலையத்தை எம்.புதுாருக்கு மாற்ற வேண்டும் என முயற்சி மேற்கொண்டது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு எம்.புதுாரில் பஸ் நிலைய கட்டுமான பணி தீவிரமாக நடந்து வந்தது. கடலுார் வாழ் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் பஸ் நிலையம் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது. ஆனால் அதற்குள் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக பஸ் நிலையப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கடலுார் பஸ் நிலையம் அமைக்கும் முயற்சி வந்துவிடப் போகிறது என்பதால் முன்கூட்டியே அந்த இடத்தில் வேறு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டும் என அப்போதைய அமைச்சர் பன்னீர்செல்வம் முடிவு செய்தார். அதன்படி பெரிய அளவில் மருதம் பூங்கா என திட்டம் தீட்டப்பட்டது. கடலுார், செம்மண்டலம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் வாயிலாக 14.16 ஏக்கர் பரப்பளவில் 6.50 கோடி மதிப்பீட்டிலும், தாழ்வாக உள்ள இப்பகுதியில் கூடுதல் மண்ணை கொண்டு மேம்படுத்திட நெய்வேலி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பூங்காவில் பல்வேறு வகையான கண் கவரும் வண்ண மலர் தோட்டங்கள், அழகிய செடி சிற்ப தோட்டங்களை உள்ளடக்கிய பாறை தோட்டம், இயற்கை பிண்ணனியுடன் கூடிய இசை தோட்டம் மற்றும் பல்வேறு சிற்பங்களுடன் கூடிய பாதுகாப்பான சிறுவர் விளையாடும் அம்சங்களுடன் அமைக்கவும், மேலும் இப்பூங்காவில் இயற்கை குளிர்ச்சியுடன் இளைப்பாறவும், நடந்திட நடைபாதை, நீர்வீழ்ச்சியுடன் கூடிய குளங்கள் மற்றும் இசை நீருற்று ஆகியன பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைக்க திட்டமிடப்பட்டது. இப்பூங்காவில், எழில்மிகு நுழைவாயில் துாண், சுற்றுச்சுவர் போன்றவை அமைக்கப்பட்டதோடு சரி. அதன் பின்னர் எந்த பணிகளும் நடைபெறவில்லை. இப்பணிகளோடு தொடங்கப்பட்ட பெண்ணையாற்றுப்பணிகள் யாவும் 90 சதவீதம் முடிந்துவிட்டன. ஆனால் மருதம் பூங்கா பணி மட்டும் துவங்கப்படவில்லை. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.