பள்ளிகளில் ஆய்வு கூடங்களை காணோம் கல்வி அதிகாரிகள் கவனிப்பார்களா
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு பாடத்திட்டத்தின் படி பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு, பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் ஆகிய பாடங்களுக்கு செய்முறை வகுப்புகள் உள்ளது. அதற்காக பள்ளிகள் தோறும் ஆய்வுக் கூடங்கள் தனியாக உள்ளது.ஆனால், பல அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆய்வுக்கூடங்களில் செய்முறை பயிற்சி அளிப்பதே இல்லை, பல பள்ளிகளில் ஆய்வு கூடங்களே இல்லை. மாறாக, அவைகள் வகுப்பறைகளாகவும், செமினார் வகுப்பறைகளாகவும், மீட்டிங் ஹாலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, ஒரு சில தனியார் பள்ளிகளிலும் ஆய்வுக்கூடங்கள் பயன்படுத்தாமல் மூடியே உள்ளது. இதனால் மாணவர்கள் செய்முறை பயிற்சி பற்றி தெரிந்து கொள்ளாமலேயே உயர்படிப்புக்கு செல்லும் நிலை உள்ளது. அரசு பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும் செய்முறை பயிற்சிக்கு, ஆய்வு கூட உபகரணங்கள் பல லட்சம் மதிப்பில் அரசு சார்பில் வாங்கி தரப்படுகிறது. அவைகள் என்னவாயிற்று என கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் செய்முறை வகுப்புகள் நடக்கிறதா என ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு கடைசியில் கடமைக்கு ஏதோ ஒரு நாளில் ஆய்வுக்கூடத்தில் மாணவர்களை உட்கார வைத்து ரெக்கார்ட் நோட்கள் மட்டும் ஏழுத வைக்கின்றனர்.இதனால் மாணவர்கள் உயர்படிப்புக்கு செல்லும் போது, அங்கு ஆய்வுக்கூடங்களில் உள்ள பொருட்களின் பெயர்கள் தெரியாமல் விழிக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே, அரசு பொதுதேர்வு நடக்க சில மாதங்களே உள்ளதால், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வுக்கூடங்களில் செய்முறை வகுப்புகள் நடக்கிறதா என ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.