திட்டக்குடி நகர்மன்ற தலைவர் பதவி ஆளுங்கட்சிக்கு மீண்டும் கிடைக்குமா? கவுன்சிலர்களின் ஆதரவு யாருக்கு
க டலுார் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. கடந்த 2021ல் சட்டசபை தேர்த்தலின்போது, தி.மு.க., வேட்பாளரான கணேசன், நான் வெற்றி பெற்றால் திட்டக்குடி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவேன் என வாக்குறுதி கொடுத்தார். அதன்படி, சட்டசபை தேர்தலில் கணேசன் வெற்றி பெற்றதுடன் அமைச்சராக பொறுப்பேற்றார். அதே ஆண்டில், கோழியூர், வதிஷ்டபுரம், இளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 24 வார்டுகளாக உயர்த்தி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2022ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், நகராட்சி சேர்மன் பதவி எஸ்.சி., (பொது) என்ற அடிப்படையில் புதிய திட்டக்குடி நகராட்சி அடி யெடுத்து வைத்தது. நகர்ப்புற தேர்தலில் வதிஷ்டபுரம் 5வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் வெண்ணிலா கோதண்டம் வெற்றி பெற்று தி.மு.க., மற்றும் வி.சி., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் என 19 பேர் ஆதரவுடன் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டு, பதவி வகித்து வந்தார், துணை சேர்மனாக தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு உள்ளார். சேர்மன் வெண்ணிலா கோதண்டம் பல மாதங்களாக வார்டுகளில் முறையாக வளர்ச்சித் திட்ட பணிகளை நிறைவேற்றவில்லை, முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என அனைத்து கவுன்சிலர்களும் ஆணையரிடம் குற்றம் சாட்டி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இரண்டு தடவை மனு அளித்தனர். மனு மீது கடந்த வாரம் நகராட்சி கூட்டரங்களில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி ஆளும் கட்சி பெண் சேர்மனின் பதவியை இழக்கவும் செய்தனர். புதிய சேர்மன் பதவியை அடைய ஆளும் கட்சி மற்றும் ஆதரவு கவுன்சிலர்களுக்குள் போட்டா போட்டி நாளுக்கு நாள் வலுத்து வருகின்றது. நகரத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் தங்கள் ஆதரவு கவுன்சிலர் ஒருவரை தேர்வு செய்யவும், பெரும்பான்மையை நிரூபிக்க சில கவுன்சிலர்களுக்கு துாது அனுப்பி அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சி தற்போது துவங்கி உள்ளது. இதனால், திட்டக்குடி நகராட்சியில் புதிய சேர்மன் ஆளும் கட்சி கவுன்சிலருக்கா... இல்லை... நகரின் முக்கிய பிரமுகரின் தலையீட்டில் தேர்வு செய்யப்படும் கவுன்சிலருக்கா... என போக போகத்தான் தெரியும்.