கடலுார் : கடலுார் அருகே எம்.புதுாரில், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், ெபாக்லைன் இயந்திரம் மூலம் இடம் சுத்தம் செய்யப்பட்டது.கடலுார் மாநகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு, 2 பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதையொட்டி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது, அனைவரும் கடலுாரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, கருத்து தெரிவித்தனர்.அதனடிப்படையில் 2021ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கலெக்டர் அலுவலகம் அருகில், கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடத்தில் பஸ் நிலையம் அமைப்பதற்கான தொடக்க விழாவும் நடந்தது.அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் தி.மு.க., பதவியேற்ற பிறகு கடலுார் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு, இடம் தேர்வு செய்யும் பணி வல்லுனர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.அக்குழு கடலுார் கரும்பு ஆராய்ச்சி பண்ணை, பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, எம்.புதுார், ஆகிய பகுதிகளில் புதிய பஸ் நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என தெரிவித்தனர்.அப்போது மத்திய சிறைச்சாலை அமைந்துள்ள எம்.புதுார் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கலாம் என தெரிவித்தனர்.இதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவை கைவிடக்கோரி, அ.தி.மு.க., தலைமை போராட்டம் அறிவித்தது. முன்னாள் அமைச்சர் சம்பத் உட்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் எம்.புதுாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், எம்.புதுாரில் புதிய பஸ் நிலையம் அமைந்தால்தான் மாநகரம் வளர்ச்சி பெறும் என ஆளுங்கட்சியினர் குரல் கொடுத்தனர்.பொதுமக்களின் எதிர்ப்பு, லோக்சபா தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகிய காரணங்களால் புதிய பஸ் நிலைய பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், தற்போது லோக்சபா தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததால், கடலுாரில் மீண்டும் புதிய பஸ் நிலையம் மீது கவனம் திரும்பியுள்ளது. பஸ் நிலையம் அமைப்பதற்கான பணியை, மாவட்ட நிர்வாகம் மீண்டும் துவக்கியுள்ளது.அதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக புதிய பஸ் நிலையம் அமைய உள்ள எம்.புதுார் இடத்தில் ெபாக்லைன் இயந்திரம் மூலம் முட்புதர்கள் அகற்றி, சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.