கலசத்தில் இரிடியம் இருப்பதாக மோசடி செய்த வாலிபர் கைது
சிதம்பரம்; கோவில் கலசத்தில் இரிடியம் இருப்பதாக கூறி பணம் பறித்த மோசடி நபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 21; ஆம்புலன்ஸ் டிரைவர். இவருக்கும், அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் விளாங்குடியை சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகர், 27; என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 31ம் தேதி காரில் சிதம்பரம் வந்த ராஜசேகர், விக்னேைஷ சந்தித்து, தன்னிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இரிடியம் உள்ள 2 கோபுர கலசங்கள் இருப்பதாகவும், கலசத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என, ஆசை வார்த்தை கூறினார்.இதை நம்பிய ராஜசேகர், ரூ. 10 ஆயிரம் முன்பணம் தருவதாக ஒப்புக்கொண்டார். அதையடுத்து, நேற்று முன்தினம் சிதம்பரம் வந்த ராஜசேகர், அண்ணாமலைநகர் முத்தையாநகர் பாலம் அருகில் நின்றிருந்த விக்னேஷிடம் 2 கலசங்களை காட்டினார். உடன் விக்னேஷ், முன்பணம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்து கலசங்களை கேட்டார். ஆனால், ராஜசேகர், கலசங்களை தராமல் தப்பி சென்றார்.இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசில் விக்னேஷ் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் வல்லம்படுகை சோதனைச்சாவடி அருகே சென்ற மோசடி ஆசாமி ராஜசேகரை காருடன் மடக்கி பிடித்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து, ராஜசேகரை கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த 2 கலசங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மோசடி ஆசாமியை விரைந்து கைது செய்த அண்ணாமலை நகர் போலீசாரை டி.எஸ்.பி., லாமேக் பாராட்டினார்.