அரூரில் நெல் கொள்முதல் நிலையம்துவங்க அதிகாரிகள் ஆய்வு பணி
அரூரில் நெல் கொள்முதல் நிலையம்துவங்க அதிகாரிகள் ஆய்வு பணிஅரூர்::'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, அரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்குவது குறித்து, அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை நன்கு பெய்ததால், அரூர், நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, கீரைப்பட்டி, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.தற்போது, நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. அரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், இடைத்தரகர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட குறைவான விலைக்கு நெல்லை வாங்குவதால், ஒரு குவிண்டாலுக்கு, 500 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அரூரில், அரசின் நேரடி கொள்முதல் நிலையம் துவங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து செய்தி நேற்று, 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது. நேற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக, தர்மபுரி மண்டல மேலாளர் தேன்மொழி, அரூர் வேளாண் அலுவலர் குமார், துணை வேளாண் அலுவலர் சரவணன் உள்ளிட்டோர், நரிப்பள்ளி, மந்திகுளாம்பட்டி, கீரைப்பட்டி, அச்சல்வாடி, புதுப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், சாகுபடி செய்துள்ள நெல் வயல்களை பார்வையிட்டதுடன், அதன் பரப்பு குறித்து, கணக்கீடு செய்தனர். நடப்பாண்டு, அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆய்வின் போது, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ராஜகுமாரன், விவசாயி வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.