வெட்டுக்கூலி கடும் உயர்வுகரும்பு விவசாயிகள் கவலை
அரூர்::தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரத்தில், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் நடவு செய்த கரும்புகளை அரவைக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கரும்பு வெட்டுக்கூலி கடுமையாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: நடப்பு அரவைக்கு, 5,139 ஏக்கரில் பதிவு செய்யப்பட்ட கரும்பு, 1.30 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு திட்டமிடப்பட்டுள்ளது. வறட்சியால், பல ஏக்கர் கரும்புகள் காய்ந்து விட்ட நிலையில், கடந்தாண்டு, டிச., 28ல் ஆலையில் கரும்பு அரவை துவங்கப்பட்டது. இந்நிலையில், தொழிலாளர்களின் பற்றாக்குறையால், கரும்பு வெட்ட முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே, உரிய நேரத்தில் அறுவடை செய்யாததால் கரும்பு பயிர்கள் பூத்து குலுங்குகிறது. இதனால், கரும்புச்சாறு குறைந்து, எடை மற்றும் அதன் தரம் குறைவதுடன், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால், கவலை அடைந்துள்ளனர். மேலும், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஒரு டன்னுக்கு, 950 ரூபாயாக இருந்த வெட்டுக்கூலி, 1,300 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், கரும்புக்கான கொள்முதல் விலை, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.