அறுவடைக்கு தயாரான நிலையில்யானைகளால் பயிர்கள் நாசம்
அறுவடைக்கு தயாரான நிலையில்யானைகளால் பயிர்கள் நாசம்வேப்பனஹள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை ஒட்டிய மலைகிராமங்கள் மிகுந்த பகுதி. இங்கு, இரு மாநில வனப்பகுதிகளிலிருந்து வரும் யானைகள், வேப்பனஹள்ளி ஊருக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த, ஒரு மாதத்திற்கு முன், கர்நாடக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய, 2 யானைகள், வேப்பனஹள்ளி சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்து, 60 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்தன. இவற்றை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலனில்லை.கொங்கனப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, தோட்டகணவாய் கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு விவசாய நிலங்களுக்குள் புகுந்த, 2 யானைகளும், அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த பூசணி, சுரைக்காய், கேழ்வரகு, நெல் உள்ளிட்ட பயிர்களை நாசமாக்கின. நேற்று காலையில் இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், '2 யானைகளையும் விரட்ட வனத்துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. வனத்துறையினர் மாலை நேரங்களில் பெயருக்கு வந்து பட்டாசு மற்றும் பானங்களை வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இரவில் யானைகள் மீண்டும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறோம். இரவில் யானைகள் வருகை குறித்து தகவல் தெரிவித்தாலும் வனத்துறையினர் வருவதில்லை. மாவட்ட நிர்வாகம் விசாரித்து, நஷ்டஈடு வழங்க வேண்டும்' என்றனர்.