உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 57 ஆண்டுகள் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் தமிழகத்தை நாசப்படுத்தியது போதும்: அன்புமணி

57 ஆண்டுகள் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் தமிழகத்தை நாசப்படுத்தியது போதும்: அன்புமணி

தர்மபுரி, ''தமிழகத்தை, 57 ஆண்டுகள், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் நாசப்படுத்தியது போதும். அக்கட்சிகள் இல்லாத, கூட்டணியை ஆதரித்து, மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற, பா.ம.க.,விற்கு மக்கள் ஓட்டு போட வேண்டும்,'' என, நேற்று இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நேற்று, மாலை, 6:00 மணியுடன் நிறைவடைந்தது. இதில், தர்மபுரி மாவட்டத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., - நா.த.க., கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில், தர்மபுரி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் சவுமியா, அக்கட்சி தலைவர் அன்புமணி மற்றும் கூட்டணி கட்சியினருடன், இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, நேற்று மாலை மதிகோன்பாளையத்திலுள்ள மாரியம்மன் கோவிலில், அம்மனை வழிபாடு செய்த பின், இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினர். குமாரசாமிப்பேட்டையில் இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்தனர். பிரசாரத்தின்போது, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் நான், எம்.பி., ஆக இருந்தபோது, போராட்டம் நடத்தி, தொடங்கிய திட்டங்கள், ஆய்வு செய்த திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும், பா.ம.க., வேட்பாளர் சவுமியா நிச்சயம் முடித்து வைப்பார். அவரை, ஒரு பொது வேட்பாளராக பார்க்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில், 80 விழுக்காடு மக்கள் ஆதரவு கொடுக்கும் திட்டத்திற்கு, மக்களின் நலன்கருதி, கொண்டு வருவது தான் ஆட்சியாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள், திட்டத்தின் தேவை அறிந்து, அதை தீர்க்க முயலவில்லை. தேர்தல் சமயத்தில் மட்டும், நாங்கள் எல்லாம் செய்வோம் என, நாடகம் ஆடுகின்றனர். மற்ற சமயங்களில் இங்குள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில், எந்த ஒரு கவனமும் செலுத்துவதில்லை. தர்மபுரி லோக்சபா தொகுதியிலுள்ள, 7.47 லட்சம் பெண் வாக்காளர்கள், ஒருமித்த முடிவுடன் ஒரு பெண் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, சவுமியாவிற்கு ஓட்டுபோட்டு, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பா.ம.க.,வின் முக்கிய நோக்கமாக, தர்மபுரி மாவட்டத்தை தன்னிறைவான பகுதியாக மாற்றவும், விவசாயம் செழிப்படைய செய்வது, முதல் குறிக்கோளாக உள்ளது. இளைய தலைமுறையினர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுத்து, அவர்களை காப்பாற்ற, சவுமியா நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுப்பதை, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் கண்டுகொள்ளவில்லை. ஆகையால், பெண்களின் ஒட்டுமொத்த கோபமும், இந்த சமுதாயத்தின் சீர்கேட்டிற்கு காரணமானவர்கள் மீது இருக்க வேண்டும். அதற்காக நீங்கள், பா.ம.க., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என, கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும். ஏனென்றால், இவர்கள், 57 ஆண்டுகள், தமிழகத்தை நாசம் செய்தது போதும். இனி தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி மற்றும் மாற்றத்தை தேடி, மக்களின் நலன் காக்கும் கட்சிகளுக்கு ஓட்டுபோட வேண்டும். அதற்கு நீங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின், பா.ம.க., வேட்பாளர் சவுமியாவுக்கு, மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை