தரமற்ற தடுப்பணை இடித்து அகற்றம்
தரமற்ற தடுப்பணை இடித்து அகற்றம்தர்மபுரி, ஆக. 25- நல்லம்பள்ளி அருகே, வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் நடந்த, தரமற்ற தடுப்பணை பணிகள் பொதுமக்கள் எதிர்ப்பால், இடித்து அகற்றப்பட்டது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மிட்டாரெட்டிஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வனத்தை ஒட்டிய பகுதிகளில், மழை காலத்தில் நீரை சேமிக்க, நீரோடை பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. இதில், கோம்பேறி மலை அடிவாரத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம், 9.39 லட்சம் மதிப்பில் வனப்பகுதி அருகே, தடுப்பணை கட்டும் பணி நடந்து வந்தது.தடுப்பணை கட்டுமான பணிகள் தரமற்ற முறையில், நடப்பதாக கூறி, அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தடுப்பணை கட்டும் இடத்திற்கு சென்ற, நல்லம்பள்ளி உதவி பொறியாளர் ஸ்ரீதர், கட்டுமான பணிகளை ஆய்வு செய்தபோது, தரமற்ற முறையில் இருந்ததால், நடந்த பணிகள் அனைத்தையும் உடைத்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார். மேலும், பணி தொடங்கும்போது, அதிகாரிகள் மேற்பார்வையில் தொடங்க அறிவுறுத்தினார். இந்நிலையில் நேற்று, நல்லம்பள்ளி பி.டி.ஓ., சர்ஹோத்தமன், உதவி பொறியாளர் ஸ்ரீதர் முன்னிலையில், பணிகள் தொடங்கியது. இதில், பொதுமக்களின் எதிர்ப்பால், தரமற்ற தடுப்பணை இடித்து அகற்றப்பட்டது குறிப்பிடதக்கது.