உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காவிரி உபரிநீர் திட்டத்தை பா.ம.க., கொண்டு வரும் தர்மபுரி மக்களிடம் சவுமியா உறுதி

காவிரி உபரிநீர் திட்டத்தை பா.ம.க., கொண்டு வரும் தர்மபுரி மக்களிடம் சவுமியா உறுதி

தர்மபுரி:''தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, காவிரி உபரிநீர் திட்டத்தை, பா.ம.க., கொண்டு வரும்,'' என, சவுமியா கூறினார்.தர்மபுரி தொகுதியில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ம.க., சார்பில் போட்டியிட்ட சவுமியா, வெற்றி வாய்ப்பை இழந்தார். அவர், தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி, தர்மபுரி சட்டசபை தொகுதியில் அதகபாடி, செக்காரபட்டி, சவுளுபட்டி, சின்னக்கம்பட்டி, குள்ளம்பட்டி, கானாபட்டி, ஒசஹள்ளிபுதுார் உள்ளிட்ட, 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.நேற்று அதகபாடியில் பொதுமக்களிடம் அவர் பேசுகையில், ''தேர்தலில் தோல்வி அடைந்தாலும், எப்போதும் உங்களுடன் இருந்து, உங்கள் பிரச்னைக்காக போராடுவேன். காவிரி உபநீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற பாடுபடுவேன். தர்மபுரி மாவட்ட மக்களின் வளர்ச்சி எனக்கு முக்கியம்,'' என்றார்.தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பா.ம.க., தொடர்ந்து போராடி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது. அதேபோல், காவிரி உபரிநீர் திட்டத்தை, பா.ம.க., கொண்டு வரும், அதற்கான முழு முயற்சி எடுப்போம். நாங்கள் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், போராட்டத்தின் மூலம், திட்டத்தை கொண்டு வர முயற்சி எடுத்து கொண்டு வருவோம். தர்மபுரி மாவட்டத்திலுள்ள வளர்ச்சி திட்ட பணிகளான சிப்காட், மொரப்பூர் ரயில்வே திட்டம் ஆகியவற்றை, பா.ம.க., முயற்சியால் நிதி ஒதுக்கீடு செய்ய வைத்து, துவக்கி வைத்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பா.ம.க.,விற்கு தான் வெற்றி என சொல்லலாம். அதிகார பலம், ஆள் பலம், பண பலம் இன்றி, அதிகளவில் ஓட்டு பெற்றுள்ளோம். இது தான் உண்மையான வெற்றி. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் இல்லாதபோது மட்டும், கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட, அனைத்து அரசியல் கட்சியினர் பேசினர். தற்போது அங்கு, தொடர் மழையால், அணைகள் முழு கொள்ளளவை எட்டி, உபரி நீரை திறந்தாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், காவிரியில் அதிகளவு தண்ணீர் வருகிறது. இதனால் அரசியல் கட்சியினர் காவிரியில் தண்ணீர் திறக்கும் உரிமை குறித்து இன்னும், 6 மாதத்திற்கு பேச மாட்டார்கள். நீட் தேர்வால் கிராம புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற நிலைப்பாட்டில், பா.ம.க., என்றைக்கும் பின்வாங்காது. இவ்வாறு, அவர் கூறினார். அவருடன், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் அரசாங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை