நிலப்பட்டா, மனை பட்டா கோரி விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். விவசாயி கள் தொழிலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் அருச்சுனன், மாவட்ட தலைவர் ரவி, உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.இதில், மாநிலம் முழுவதும் குடிமனைப்பட்டா இல்லாதவர்கள் எண்ணிக்கை, 40 லட்சமாக உள்ளது. எனவே, நீண்ட காலமாக அரசின் பல்வேறு புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வகைமாற்றம் செய்து, பட்டா வழங்க சிறப்பு திட்டத்தை உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும். வீடு இல்லாத மழை மக்களுக்கு, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் வழங்கப்பட்ட, 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியல் சமூக மக்களிடம் ஒப்படைக்க, மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும். 1963ல் இனாம் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாறுதல் சட்டத்தின் படி, பட்டியல் செய்யப்பட்டுள்ள நிலங்களை கண்டறிந்து, நேரடியாக உழவடை செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க, தமிழக அரசு தனி ஆணையம் உருவாக்க வேண்டும்.பட்டா கோரி விண்ணப்பம் செய்யும் விவசாயிகளுக்கு, 3 மாத கால இடைவெளியில் பட்டா வழங்க வேண்டும். தமிழகத்திலுள்ள, 70 லட்சம் ஏக்கர் அரசு புறம்போக்கு தரிசு நிலங்களை நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பாரம்பரியமாக வள நிலங்களில் வாழ்ந்து வரும், பழங்குடி மக்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.