யாசகம் பெற்ற ரூ.10,000 கலெக்டரிடம் வழங்கிய முதியவர்
தர்மபுரி, பொதுமக்களிடம் யாசகமாக பெற்ற பணத்தை, துாத்துக்குடியை சேர்ந்த முருக பக்தர், முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் நேற்று வழங்கினார்.துாத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி, 75. இவரது மனைவி கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது, 3 மகன்களும் திருமணமாகி தனியே வசிக்கும் நிலையில், முருக பக்தரான பூல்பாண்டி, பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழ்ந்தார். இதில், தன் தேவை போக, மீதமுள்ளதை, 1971ம் ஆண்டு முதல், முதல்வரின் பொது நிவாரண நிதி மற்றும் அரசு பள்ளிகளுக்கு தன்னால் முடிந்த நிதியை வழங்கி வந்தார். அதன்படி நேற்று, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, 10,000 ரூபாய் வழங்கினார்.இது குறித்து பூல்பாண்டி கூறுகையில், ''இதுவரை, 400க்கும் மேற்பட்ட பள்ளிகள், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி மற்றும் கொரோனா நிவாரண நிதிக்கு என, 1.20 கோடி ரூபாய் வரை வழங்கி உள்ளேன். எந்த மாவட்டத்தில், யாசகம் பெற்றாலும், அங்குள்ள பள்ளி அல்லது அந்த மாவட்ட கலெக்டரிடம் முடிந்த நிதியை வழங்கி விட்டு, அடுத்த மாவட்டத்திற்கு, யாசகம் பெற சென்று விடுவேன்,'' என்றார்.