| ADDED : ஜூலை 02, 2024 10:49 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி கோழிமேக்கனுார் கிராமத்தில், குடிசைமாற்று வாரியம் மூலம், 14.82 கோடி ரூபாய் மதிப்பில், 168 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். வீடில்லா ஏழைகளுக்கு அரசால் குறைந்த விலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலானோர் வசதி வாய்ப்புகளோடும், வீடு வைத்திருப்பவர்களும், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற்றுள்ளனர்.வீடில்லா ஏழைகள், அரசால் கேட்ட தொகை கொடுத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் கிடைக்கவில்லை. இந்த, 168 வீடுகளில், வீடு இல்லை எனக்கூறி பெற்றவர்கள், 40 வீடுகளை, 2,500 ரூபாய், 3,000 ரூபாய்க்கு மாத வாடகைக்கு விட்டுள்ளனர். 124 பேர் குடியிருந்து வருகின்றனர். 4 பேர் இன்னும் குடிவரவில்லை. வீடுகள் இல்லை எனக்கூறி, அரசின் சலுகை விலையில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகளை பெற்று, அதை உள்வாடகைக்கு விட்டுள்ளவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.