ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி வரை 15,000 மரக்கன்றுகள் நட ஏற்பாடு
பாப்பிரெட்டிப்பட்டிதிருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி முதல், சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் வரை, 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.இதில், முதல் கட்டமாக வாணியம்பாடி முதல், தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி வரையில், 320 கோடி ரூபாய் மதிப்பிலும், ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை, 170 கோடி ரூபாய் மதிப்பிலும், 4 வழிச்சாலை அமைத்து போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் ஏ.பள்ளிப்பட்டி முதல், மஞ்சவாடி கணவாய் வரை, உள்ள, 17 கி.மீ., தொலைவிற்கு சாலையின் இருபுறமும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டம், வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.இது குறித்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில், 39 சதவீதம் வனப்பகுதியாகும். வனப்பகுதியை அதிகரிக்க மரக்கன்றுகள் அதிகளவு நடப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிக வாகன போக்குவரத்து உள்ள சாலைகளின் இருபுறமும், வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுக்கவும், சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தவும், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, தேசிய நெடுஞ்சாலையில் ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை, 17 கி.மீ., தொலைவிற்கு சாலையின் இருபுறமும், புளியமரம், நாவல் மரம், புங்கன், வேப்ப மரம் உள்ளிட்ட பலவகையான, 15,000 மரக்கன்றுகள் நட தயார் நிலையில் உள்ளது. விரைவில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்க உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.