அரசு பஸ்களில் தானியங்கி கதவு அமைப்பு மாணவர்கள் படிக்கட்டு பயணம் தவிர்ப்பு
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூரில் செயல்படும் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, அரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் படிக்க வருகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து பள்ளி, கல்லுாரிக்கு செல்வோர், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என, அனைவரும் ஒரே நேரத்தில் பஸ்சில் பயணம் செய்வதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டது. இதனால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டது. சில நேரங்களில் பஸ்களில் இருக்கைகள் காலியாக இருந்தபோதிலும், அதில் மாணவர்கள் அமராமல், ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்து வந்தனர். ஓட்டுனர், நடத்துனர் மற்றும் போலீசார், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய போதிலும், அவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை கைவிடவில்லை.இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம், அரூர் கிளையிலிருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும், 20 டவுன் பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லாத நிலை ஏற்பட்டு உள்ளதுடன், விபத்துகளும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.