வங்கி கணக்கு பராமரிக்க விழிப்புணர்வு
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் சில்லரஅள்ளி, மற்றும் மொரப்பூர் பகுதியில் ஜீரோ பேலன்ஸ் கணக்குகள், காலாவதியான கணக்குகளை புதுப்பித்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில் வங்கிகள் மூலம் காப்பீடு தொகையை, பயனாளிகளுக்கு வழங்கி, ரிசர்வ் வங்கி சென்னை மண்டல இயக்குனர் உமா சங்கர், வங்கி செயல்பாடுகள் மற்றும் பொதுமக்கள் அணுக வேண்டிய விதம் குறித்து பேசினார்.தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறுகையில், ''நாடு முழுவதும் வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் கூடிய வங்கி கணக்குகளை பராமரிப்பது, புதுப்பிப்பது, தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் ஆர்.பி.ஐ., வங்கி மூலம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை, 1 முதல் செப்., 30 வரையில் என் தலைமையில் பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் கிராமப்பகுதி மக்கள் தொடங்கிய, ஜீரோ பாக்கியுடன் கூடிய வங்கி கணக்குகள் காலாவதியாகி இருந்தாலும், பணப்பரிமாற்றம் செய்ய இயலாத நிலையில் இருந்தாலும், அவற்றை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக, ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, காலாவதியான வங்கிக்கணக்கு வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார், பான் அட்டை உள்ளிட்ட விபரங்களுடன் வங்கிகளை அணுகி, கணக்குகளை புதுப்பித்துக் கொள்ளலாம்,'' என்றார். தர்மபுரி மாவட்ட இந்தியன் வங்கி அலுவலர்கள் ராஜேந்திரன், பிரேந்திரகுமார், ஆர்.பி.ஐ., ரவிக்குமார், முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், கிளை மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.