| ADDED : ஆக 24, 2011 12:58 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையை தொடர்ந்து மானாவாரி நிலங்களில் உயர் தொழில் நுடப்பங்களை கடைப்பிடித்து விளைச்சலை பெருக்க வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது. வேளாண் இணை இயக்குனர் ராஜன் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் மானாவாரி பயிராக நிலக்கடலை 15,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக மழையின்மை காரணமாக வாடி வதங்கிய நிலையில் இருந்த இப்பயிர் தற்சமயம் பெய்த மழை இச்சாகுபடிக்கு பயன் உள்ளதாக உள்ளது. தற்போது, பூக்கும் நிலையில் உள்ள இப்பயிருக்கு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு கொத்தி களையெடுத்து மண் அணைக்க வேண்டும். இது பொக்கற்ற, திரட்சியான காய்களை பெற உதவும், எடை கூடும், எண்ணெய் சத்து அதிகரிக்கும், கூடுதல் விலை கிடைக்கும்.* மரவள்ளியில் ஊடுபயிர்: கார்த்திகை, மார்கழி, தை மாங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிரில் தொடர்ந்து நிலவிய கடும் வறட்சியின் காரணமாக போக்கிடங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது.தற்போது, மீண்டும் மரவள்ளி கரணைகள் நடவு செய்ய வாய்ப்பு இல்லை. தற்போது பெய்த மழையை பயன்படுத்தி நன்கு கொத்தி களை எடுத்து பயிருக்கு உரமிடலாம். அதே சமயம் போக்கிடங்களில் பயறு வகை பயறுகளான பாசிப்பயறு, உளுந்து மற்றும் காராமணி பயிர்களை விதைப்பு செய்து வருவாய் இழப்பை தவிர்க்கலாம்.* சிறுதானியங்கள்: சோளம், ராகி, சாமை ஆகிய பயிர்கள் விதைப்புக்கு ஏற்ற தருணம். சோளம் விதைப்பிற்கு முன் பட்டத்தில் மழையில்லாமையால் விதைப்பு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, சோளம் விதைப்பு செய்யும் விவசயிகள் விதை மூலம் பரவும் சோளம் கரிப்பூட்டை நோயை கட்டுப்பத்த விதைக்கும் முன் ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராமம் கந்தகம் என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.ராகி பயிரை பொறுத்த வரையில் வறட்சியை தாங்கி அதிக விளைச்சல் தரவல்ல மானாவாரிக்கு ஏற்ற ரகங்கள் ஜி.பி.யு., 28, பையூர் 1, கோ 13 மற்றும் கோ (ஆர்) 14 ஆகிய ரகங்கள் தேர்வு செய்ய வேண்டும். விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த பூஞ்சாள மருந்தை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். சாமையில் உயர் விளைச்சல் தரவல்ல குறைந்த வயதுடைய கோ 3 ரகங்கள் மிகவும் ஏற்றதாகம். விதைப்புக்கு முன் 10 சதவீதம் இளநீர் கரைசலில் விதைகள் ஆறு மணி நேரம் ஊற வைத்து விதைப்பதன் மூலம் அதிக விளைச்சல் பெற முடியும்.அனைத்து சிறு தானிய பயிர்களையும் பூஞ்சாள விதை நேர்த்தி செய்த 24 மணறி நேரத்துக்கு பின் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையை ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பொட்டலம் பாஸ்போபேக்டீரியா தேவையான ஆறின அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின் விதைப்பு செய்ய வேண்டும். அடியுரமாக 16 கிலோ தழைச்சத்து தரவல்ல 35 கிலோ யூரியா மற்றும் 8 கிலோ மணிசத்து தரவல்ல 50 கிலோ சூப்படர் பாஸ்பேட் உரத்தை அடியுரமாக இட்டு விதைப்பு செய்திட வண்டும். ஏற்கனவே விதைப்பு செய்யப்பட்ட பயிர்களுக்கு அடியுரம் இடாமல் விதைப்பு செய்திருந்தால் 16 கிலோ தழைசத்து தரவல்ல 35 கிலோ யூரியாவை இட்டு இடையுழவு செய் வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.