| ADDED : செப் 01, 2011 01:21 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி எல்லை விரிவாக்கம், பஸ் ஸ்டாண்ட் இட மாற்றம் இல்லை என நகராட்சி கூட்டத்தில் நகராட்சி தலைவர் அறிவித்தார். இதை முன் வைத்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.டவுன் பஞ்சாயத்தாக இருந்த தர்மபுரி கடந்த 1964ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின் கடந்த 1971ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி முதல் உயர்நிலை நகராட்சியாகவும், கடந்த 1987ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.இந்நகராட்சியின் எல்லை விருபாட்சிபுரம் கிராமம், வெள்ளேகவுண்டன்பாளையம், பழைய தர்மபுரி, அன்னாசகரம் ஆகிய கிராங்களில் ஒரு சில பகுதிகள் நீங்களாக சில வருவாய் கிரமங்கள் உள்ளடக்கி உள்ளது. நகராட்சியின் மொத்த பரப்பளவு 11.65 சதுர கி.மீ.,ஆகம்.தர்மபுரி நகராட்சியின் எல்லையை விரிவுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2007ம் ஆண்டு தர்மபுரி நகராட்சியில் சில பகுதிகள் நீங்கியுள்ள வருவாய் கிராமங்களான வெள்ளேகவுண்டன் பாளையம், விருப்பட்சிபுரம், பழைய தர்மபுரி ஆகிய பகுதிகளை நகராட்சி எல்லையில் சேர்க்க ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறைக்கு கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.அந்த கருத்துருக்கள் அடிப்படையில் இப்பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கப்படும் என் பேச்சு இருந்தது. அதே போல் தர்மபுரி நகரின் மையப்பகுதியில் உள்ள நகராட்சி பஸ் ஸ்டாண்ட் நெரிசலை தவிர்க்கும் வகையில் பென்னாகரம் சாலை மற்றும் தடங்கம் பஞ்சாயத்து பகுதிக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.இதை மையப்படுத்தி தர்மபுரி நகரில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்கள் நகராட்சியுடன் இணையும் பகுதி மற்றும் பஸ் ஸ்டாண்ட் வரப்போகும் பகுதி என கூறி அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை குறைந்த விலையில் வாங்கி வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய துவங்கினர்.பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட வசதிகள் வருவதால், வரும் காலங்களில் இப்பகுதியில் உள்ள நிலங்களில் மதிப்பு உயரும் என்ற அடிப்படையிலும், நகராட்சியுடன் பஞ்சாயத்து பகுதிகள் இணைக்கப்பட்டால், நிலத்தின் மதிப்பு நகர அமைப்பு அடிப்படையில் உயரும் என்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை கூறி இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடந்தது.ஒரு காலத்தில் விலை போகாத இந்த நிலங்கள் அனைத்தும் சதுர அடிக்க 300 முதல் 500 ரூபாய் வரையில் விலை பேசப்பட்டது. வெளியூர்களில் இருந்து தர்மபுரியில் தங்கி பணிபுரிவோர் நிலம் கிடைத்தால் போதும் என நில விற்பனையாளர்கள் கூறிய தொகைக்கு நிலங்களை வாங்கினர்.வர்த்தக நிறுவனங்கள் நடத்துவோர் பஸ் ஸ்டாண்ட் வரும் என கூறப்பட்ட பகுதியில் முன் கூட்டியே நிலங்களை வரும் காலங்களில் வணிக நிறுவனங்கள் கட்ட வசதியாக நிலங்களை இந்த பகுதியில் வாங்கினர்.பல அப்பாவிகள் இந்த ஆசை வார்த்தைகளை நம்பி நிலங்களை கூடுதல் விலைக்கு வாங்கி போட்டிருந்த நிலையில் தற்போது, இன்னும் இரு ஆண்டுக்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றம் மற்றும் பஞ்சாயத்து பகுதிகள் நகராட்சியுடன் இணைப்புக்கு அரசு அனுமதியளிக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.நேற்று முன்தினம் நடந்த நகராட்சி கூட்டத்தில் பேசிய நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா இந்த கருத்தை வெளிப்படையாக அறிவித்தார். இதனால், பல்வேறு எதிர்பார்ப்புடன் நிலங்களை வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்தோடு, பஸ் ஸ்டாண்ட் வரும் என கூறி ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர்களும், இதை நம்பி கூடுதல் விலைக்கு நிலத்தை விற்க திட்டமிட்டவர்களும் பெரும் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.