| ADDED : செப் 17, 2011 01:22 AM
தர்மபுரி: உள்ளாட்சி அமைப்புகளில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாதம் தோறும், 1,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்பில் மூன்றாடுக்கு முறையில் உள்ளாட்சி நிர்வாகம் செயல்படும் வகையில், 1994ம் ஆண்டு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன்படி தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு முக்கியமான மாறுதல்கள் கொண்டு வரப்பட்டன. கடந்த, 1994ம் ஆண்டு சட்ட திருத்தத்தை தொடர்ந்து மூன்றடுக்கு ஊராட்சி முறை கொண்டு வரப்பட்டது. ஊராட்சி என்ற பொதுப்படையான சொல் மூன்றாடுக்கு ஊராட்சி அமைப்புகளை குறிப்பதற்கு என, பயன்படுத்தப்படுகிறது. டவுன் பஞ்சாயத்து நகர்பாலிகா சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்புகளுக்கான உறுப்பினர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகியோரை வாக்காளர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். பஞ்சாயத்து யூனியன் சேர்மன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆ÷கியோர் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்களால் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் முறை நடைமுறைக்கு வந்தது. கிராம பஞ்சாயத்து தலைவரை பொறுத்த வரை 'செக்' பவர் கிராம பஞ்சாயத்து தலைவருக்கு மட்டுமே உள்ளது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் கடுமையான போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி என்பது கவுரவமான பதவியாக கருத்தப்பட்ட நிலை மாறி, தற்போது, கிராம பஞ்சாயத்து நிதி ஆதாரங்களை கையாளும் வாய்ப்பு இருப்பதால், பதவிக்கு போட்டியும் அதிகரித்துள்ளது. கிராம பஞ்சாயத்து தலைவர்களே கிராம பஞ்சாயத்தில் செயல் அலுவலர்களாக செயல்பட்டு வருகின்றனர். உள்ளாட்சி மூன்றடுக்கு முறையில் கிராம பஞ்சாயத்து தலைவருக்கு பொறுப்புகள் அதிகம் உள்ளது. பஞ்சாயத்து பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளையும், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்புகள் கிராம பஞ்சாயத்து தலைவருக்கு உள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கிராம பஞ்சாயத்து தலைவர்களின் பொறுப்புகளை உணர்ந்து பஞ்சாயத்து தலைவர்களுக்கு அந்த மாநில அரசுகள் மதிப்பூதியம் வழங்கி வருகிறது. தற்போது, தமிழக அரசும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிட முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு வழங்கப்படும் அமர்வு படியை, 50 ரூபாய் இருந்து, 100 ரூபாயாகவும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அமர்வு படி, 25 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட முடிவு செய்துள்ளது. இதற்கான செலவினங்களை மாநில நிதி ஆணைய மானியத்தில் இருந்து பெற்று கொள்ளவும் முடிவு செய்துள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் பஞ்சாயத்து தலைவர்கள் மாதம் தோறும் மதிப்பூதியம் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனால், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் இந்த முறை போட்டிகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என தெரிகிறது.