கடத்துார் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்துார், பல்வேறு கிராமங்களின் மையப்பகுதியாக உள்ளது. இதை சுற்றி மணியம்பாடி தாளநத்தம், சில்லாரஹள்ளி, முத்தனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கிருந்து தினந்தோறும் தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சேலம், பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், கடத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்களில் செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல வரும், பொதுமக்கள் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பால், உட்காரவும், நிற்கவும் இடமின்றி இருந்தது. பொதுமக்கள் வெளியூர் பயணிகள் அமர, பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் இருந்த போதிலும், பயணிகள் அமர முடியாத அளவிற்கு, தங்களது கடை பொருட்களை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். சிலர் தற்காலிக கடைகள் வைத்து இருந்தனர். மேலும் கார் பைக் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் பஸ் ஸ்டாண்ட் மாறியது.இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று செயல் அலுவலர் கோமதி தலைமையில், பேரூராட்சி அலுவலர்கள் மோகன், சுகாதார அலுவலர் செந்தில், எஸ்.ஐ.,க்கள் நவீன், சேகர் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். கடைகளுக்கு முன்பிருந்த பொருட்களை அப்புறப்படுத்தி எடுத்து சென்றனர்.