கால்வாய் உடைப்பை சீர் செய்ய விவசாயிகள் கூட்டமைப்பு மறியல்
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஹள்ளி அணையில் இருந்து உபரி நீர் பூலாப்பட்டி ஆற்றில் செல்கிறது. இதன் மூலம், 100க்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயில் ஜம்பேறி ஏரியில் இருந்து காளியம்மன் கோவில் வரை பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உபரி நீர் வீணாக செல்கிறது. கால்வாயிலுள்ள மதகும் சேதமான நிலையில், உபரி நீர் வீணாக சென்று, கடலில் கலக்கும் நிலை உள்ளது. கால்வாய் உடைப்பு மற்றும் மதகை சீர் செய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது தொடர் மழையால் தும்பலஹள்ளி அணையில் நீர்வரத்து உள்ளது. இது அதிகமானால் அணை நிரம்பும் நிலையில், உபரி நீர் பூலாப்பட்டி ஆற்றில் செல்லும்போது கால்வாய் உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாக வாய்ப்புள்ளது. எனவே, ஏரி கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், 50-க்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டி பிரிவு சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிட செய்தனர்.