அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவை கடந்த நவ., 18ல் துவங்கியது. தற்போது, கரும்பு அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கோட்ட அலுவலகங்களில் கரும்பு கட்டிங் ஆர்டர் பட்டியலை ஒட்ட, ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: நடப்பு அரவைக்கு, 10,000 ஏக்கரில் பதிவு செய்யப்பட்ட கரும்பு, 3.25 லட்சம் டன் அரவை செய்ய இலக்கு திட்டமிடப்பட்டு, கரும்பு வெட்டும் பணி நடக்கிறது. இந்நிலையில் சில இடங்களில், சீனியாரிட்டி அடிப்படையில் கரும்பு வெட்டாமல், பின்னால் நடவு செய்தவர்களுக்கு கட்டிங் ஆர்டர் வழங்கப்பட்டு, கரும்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கரும்பு கோட்ட அலுவலகங்களில், பதிவு மூப்பு அடிப்படையிலான, கட்டிங் ஆர்டர் பட்டியல் ஒட்ட வேண்டும். அதேபோல், அரவை ஆலையில் இருந்து, தோட்டங்களுக்கு கரும்புகளை ஏற்றிச்செல்ல வரும் வாகனங்கள், மாமூல் பிரச்னையால், கரும்புகளை ஏற்றாமல் திரும்பிச் செல்லக்கூடாது. அவ்வாறு திரும்பிச் செல்லும் வாகனங்களில், மீண்டும் கரும்புகளை ஏற்ற அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.