தீயணைப்புத்துறை வீரர்கள் வெள்ள மீட்பு செயல்விளக்கம்
அரூர், வரட்டாறு தடுப்பணையில் தென்மேற்கு பருவமழை மற்றும் பேரிடர் விழிப்புணர்வுக்கு தீயணைப்பு துறையினர் ஒத்திகை செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணையில், தென்மேற்கு மழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள், பாதிப்பு குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தீயணைப்புத்துறையினர் நேற்று ஒத்திகை நடத்தினர். அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை வகித்தார். இதில், அரூர் நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். வெள்ள பகுதி மற்றும் ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றில் சிக்கியவர்களை மீட்கும் வழிமுறை, வீட்டிலுள்ள பொருட்களை வைத்து வெள்ளத்திலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். தாசில்தார் பெருமாள், பொதுப்பணித்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.