தர்மபுரி: தமிழக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 76-வது பிறந்தநாள் விழா, தர்மபுரியில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகித்து, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர்., உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.* பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில், நகர செயலாளர் தென்னரசு முன்னிலையில், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதேபோன்று பொ.மல்லாபுரம், கடத்துார் பேரூராட்சிகளில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் சேகர், முருகன், நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* அரூர் அடுத்த எச்.அக்ரஹாரத்திலுள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில், தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., உணவு வழங்கினார். இதில், சம்பத்குமார் எம்.எல்.ஏ., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, நிர்வாகிகள் சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அரூர் பஸ் ஸ்டாண்டில் அலங்கரிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு சம்பத்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், அக்கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். இதேபோல், தீர்த்தமலை, மொரப்பூர், கம்பைநல்லுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஜெயலலிதா பிறந்த விழா கொண்டாடப்பட்டது.