| ADDED : ஜன 18, 2024 10:32 AM
தர்மபுரி: கோவிலுாரில் குந்தியம்மன் கோவிலில் கரக திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தர்மபுரி மாவட்டம், புலிகரை அருகே கோவிலுாரில் மிகவும் பழமையான, குந்தி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வோர் ஆண்டும் தை மாதம், 3ம் நாள் கரக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலையில் அம்மனுக்கு பால், இளநீர், தேன், சந்தனம், குங்குமம், உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து பூக்களால் அம்மனை அலங்கரித்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. மேலும், அலங்கரிக்கப்பட்ட கரகம் சுற்றுவட்டார கிராமங்களின் வழியாக சென்று கோவிலை அடைந்ததும், அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பூஜைசெய்து, தீமிதி விழா வெகு விமர்சையாக நடந்தது. நேற்று நடந்த, கரக திருவிழாவில், 10,000க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவிலில், பக்தர்களுக்கான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். பொதுமக்கள் கோவிலுக்கு வழிபட அதிகளவில் வந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.