மாணவர்கள் நலன் கருதி மேலாண்மை குழுவினர் ஆய்வு
தர்மபுரி, தர்மபுரி அருகே, அரசு பள்ளியில் பருவமழை காலத்தில், மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்படாமல் இருக்கவும் மற்றும் சுகாதாரம் குறித்து, பள்ளி மேலாண்மை குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதே சமயம் சீதோஷண நிலை மாற்றம் உள்ளிட்டவற்றால், டெங்கு, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்டவை வேகமாக பரவி வருகிறது.இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, தர்மபுரி மாவட்டம், கடகத்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர், உணவு குறித்து, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகுமார் தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை ஆசிரியர் முன்னிலையில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.மேலும், பள்ளி கழிவறை, வளாகம் மற்றும் சமையல் கூடத்தை துாய்மையாகவும் சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ள பள்ளி மேலாண்மை குழுவினர் அறிவுறுத்தினர்.