உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேசிய தர மதிப்பீட்டு குழு அரூர் ஜி.ஹெச்.,ல் ஆய்வு

தேசிய தர மதிப்பீட்டு குழு அரூர் ஜி.ஹெச்.,ல் ஆய்வு

அரூர்:அரூர் அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தாய் சேய் அவசர சிகிச்சை மையம், மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்சிளங் குழந்தைகள் பிரிவுகள் உள்ளன. நேற்று காலை, 9:30 மணிக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த தேசிய தர மதிப்பீட்டு குழு உறுப்பினர்களான, டில்லியை சேர்ந்த டாக்டர்கள் பத்மராஜ், ஷீஜா ஆகியோர் தர மதிப்பீட்டு பணியை மேற்கொண்டனர். அப்போது, அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டதுடன், நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கப்படும் விதம், அவர்களுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, கழிப்பறை, குடிநீர், சுற்றுப்புறத் துாய்மை, ஆய்வகங்கள், எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் அறைகளை பார்வையிட்டதுடன், மருத்துவமனையில் உள்ள சமையலறைக்கு சென்று சுகாதாரமாக உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 2வது நாளாக இன்றும் ஆய்வு நடக்கவுள்ளது.ஆய்வின்போது, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, அரூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.தேசிய தர மதிப்பீட்டு ஆய்வுக்குழுவால் மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு, மத்திய அரசிடம் சமர்பித்தவுடன், அரூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்படும். அவ்வாறு தரச்சான்று வழங்கப்படும் பட்சத்தில், இம்மருத்துவமனைக்கு ஆண்டுக்கு கூடுதலாக, 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். இந்நிதி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுகளை மேம்படுத்த பயனுள்ளதாக அமையும் என, அரூர் அரசு மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை