ஒகேனக்கலில் பரிசலுக்கு அனுமதி
ஒகேனக்கல்:காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து விநாடிக்கு 23,342 கன அடி உபரிநீர், காவிரியாற்றில் திறக்கப்படுகிறது. இதனால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுவில் நீர்வரத்து நேற்று காலை 10:00 மணிக்கு வினாடிக்கு 24,000 கன அடியாக சரிந்ததை அடுத்து காவிரியாற்றில் பரிசல் இயக்க, மூன்று நாட்களுக்கு பின் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து பரிசல்கள், சின்னாறு பரிசல் துறையிலிருந்து மெயின் அருவி வழியாக மணல் திட்டு வரை இயக்கப்பட்டது. சுற்றுலா பயணியர் உற்சாகமாக சவாரி செய்து மகிழ்ந்தனர். ஆற்றில் குளிக்க தடை தொடர்கிறது.