உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலையை சீரமைத்து தராததால் பொதுமக்கள் சாலை மறியல்

சாலையை சீரமைத்து தராததால் பொதுமக்கள் சாலை மறியல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஹள்ளி பஞ்., உட்பட்ட ஈச்சம்பள்ளம் பகுதி உள்ளது. இங்குள்ள சாலை வழியாக நெக்குந்தி, எர்ரபையனஹள்ளி, பண்டஹள்ளி உள்ளிட்ட பகுதி மக்கள், மஞ்சநாயக்கனஹள்ளி வழியாக மேச்சேரியை எளிதாக சென்றடைய சாலை உள்ளது. இச்சாலை வழியாக, 17, 50, 28, 6 என்ற எண் கொண்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இச்சாலை சேதமாகி, 2 கி.மீ., அளவுக்கு தார்ச்சாலை, மண் சாலையாக மாறி உள்ளது. இச்சாலை வழியாக, கனரக வாகனங்கள், 4, 2 சக்கர வாகனங்கள் செல்ல முடியாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதற்காக, கடந்த, 4 வருடங்களாக தர்மபுரி மாவட்ட கலெக்டர், நல்லம்பள்ளி பி.டி.ஓ., மற்றும் எர்ரபையனஹள்ளி பஞ்., தலைவரிடம் மனு அளித்தும், யாரும் சாலையை சீரமைக்கவோ, பார்வையிடவோ வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை அவ்வழியாக வந்த, 17 எண் கொண்ட அரசு டவுன் பஸ்சை, சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சாலையிலேயே அடுப்பு மூட்டி சமையல் செய்ய தொடங்கினர். சம்பவ இடம் வந்த நல்லம்பள்ளி தாசில்தார் பார்வதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, 3 மணி நேர சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ