ஆங்கிலேயர் காலத்து ரயில்வே ஸ்டேஷனை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
தர்மபுரி,:ஆங்கிலேயர் காலத்தில், கைவிடப்பட்ட மூக்கனுார் ரயில்வே ஸ்டேஷனை, தர்மபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்தின் போது, பயன்பாட்டிற்கு கொண்டு வர, அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், மூக்கனுாரில், 1901 முதல், 1945 ஆண்டு வரை ஆங்கிலேயர் காலத்தில், மொரப்பூர் - தர்மபுரி ரயில்வே திட்டம் பயன்பாட்டில் இருந்தது. அதில் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் பயன்பாட்டில் இருந்தது. 1945ம் ஆண்டு ஆங்கிலேய அரசு மொரப்பூர் வழியாக தர்மபுரிக்கு ரயில்கள் இயக்கத்தை நிறுத்தியது. இந்நிலையில், மொரப்பூர் - தர்மபுரி ரயில்வே திட்டத்திற்கான அளவீடு பணிகள் முடிந்து, பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதில், மூக்கனுார் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலத்தில், ரயில் பாதை மற்றும் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் பணிக்கு, ஊர்மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். இதை சிலர், அவர்களின் சுயலாபத்திற்காக, ஊர்மக்கள் பாதிப்பதாக பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர். அரசுக்கு விரோதமான செயலை செய்யும் அவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆங்கிலேயர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த பழைய ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும். மூக்கனுாரில், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் இதர பணிகளுக்கு அரசு நிலத்தை தராளமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.