பஞ்., முழுவதும் சீமை கருவேல மரம் அகற்றம்ஏரியில் படகு இல்லம் அமைக்க கோரிக்கை
தர்மபுரி,தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், முக்குளம் பஞ்.,க்கு உட்பட்ட முக்குளம், சீகலஹள்ளி, மொரசப்பட்டி, மூக்கனுார், உட்பட, 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள, 7 ஏரிகளில் சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அடர்ந்து காணப்பட்டன. இதன் காரணமாக, மழை காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், பஞ்., நிர்வாகம் நீர்வளத்தை பெருக்க திட்டமிட்டு, சோமலிங்க ஐயர் ஏரியில் இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றி துாய்மைப்படுத்தியது. மேலும், ஏரிக்கரை முழுவதும் மா, பலா, வாழை, நாவல், மூங்கில், காட்டு நெல்லி உள்ளிட்ட பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தது. காரிமங்கலம் ஒன்றியத்தில், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு முன்மாதிரி கிராமமாக முக்குளம் பஞ்சாயத்தை, பி.டி.ஓ., தேர்ந்தெடுத்தார். அதை தொடர்ந்து, பஞ்., நிர்வாகம், வனத்துறை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இணைந்து கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, மாணவர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்கள் பங்களிப்புடன், மொரசப்பட்டி, முக்குளம், சீகலஹள்ளி, சோமலிங்க ஐயர் ஏரி என, 5 ஏரிகளில் சீமை கருவேல மரங்களை அகற்றினர். கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக, ஏரிகள் முழுவதும் தண்ணீர் நிறைந்துள்ளது. மாவட்டத்தில் சீமை கருவேல மரங்கள் இல்லாத பஞ்.,ஆக மாற்றி, நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்துள்ளனர். ஏரியை சுற்றிலும் நடைப்பாதை, பூங்கா மற்றும் படகு இல்லம் அமைத்து கொடுத்தால், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதி யில் உள்ள மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பைக் வீலிங் செய்த வாலிபர்கள் தர்மபுரியில் மடக்கி பிடித்த போலீசார் தர்மபுரி, தர்மபுரி டவுன் மற்றும் அதை சுற்றியுள்ள நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. அதே அளவில், விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான விபத்துகள் பைக்குகளால் ஏற்படுகிறது. சாலை விதிகளை மதிக்காமல் பைக்கை அதிவேகமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது, மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவை விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதில், பைக் ஓட்டும் நபர்கள் மட்டுமல்லாமல் மற்ற வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். அதை கட்டுபடுத்த முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று தர்மபுரி டவுன் மற்றும் சோகத்துார் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நிறைந்த சாலைகளில், அதிவேகமாக பைக் ஓட்டி வீலிங் செய்த இளைஞர்களை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர். இதில், அவர்களிடமிருந்து, 5 யமஹா, ஒரு கே.டி.எம்., உட்பட, 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர். அதில், பலர் லைசன்ஸ் மற்றும் உரிய ஆவணங்கள், ஹெல்மெட், வாகன பதிவெண் உள்ளிட்டவை இல்லாமல் பைக் ஓட்டியது தெரியவந்தது. பைக்கை ஓட்டி வந்த இளைஞர்களுக்கு அபராதம் விதித்ததுடன், அவர்களது பெற்றோரை வரவழைத்து, அவர்களுக்கும் அறிவுரை கூறி அனுப்பினர். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.