| ADDED : ஜன 08, 2024 11:03 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற, அலுவலர்கள் சங்க மாவட்ட கூட்டம் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நேற்று மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில், சங்க அலுவலகத்தில் நடந்தது.இதில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலக சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செல்லப்பன் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து பேசினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் ஜெயபால் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் ஆணையாளர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, அனைத்து அரசு மருத்துவமனையிலும் ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியர்களுக்கான, 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்க வேண்டும். 2021 சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி, 70 வயது நிரம்பியவர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி, 2.50 லட்சம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மத்திய அரசு மருத்துவ படி, ஆயிரம் வழங்குகிறது. மாநில அரசும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.