சுருக்குப்பையில் கிடந்த ரூ.2,700 போலீசில் ஒப்படைத்த மாணவியர்
பாலக்கோடு, பாலக்கோடு, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் ஹரித்ரா, சஹானா ஆகிய, 2 மாணவியர், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து வீடு திரும்பினர். பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், சாலையோரம் சுருக்குப்பை கிடந்ததை பார்த்து எடுத்து பார்த்தனர். அதில், 2,705 ரூபாய் இருந்தது. அருகில் உள்ளவர்களிடம் அது யாருடையது என விசாரித்தனர். பின் அந்த பணம் இருந்த சுருக்குப்பையை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர்.அப்போது மாணவியர் கூறுகையில், 'அப்பணத்தை தவற விட்டவர்கள் கவலையாக இருப்பார்கள். எந்த அவசர தேவைக்காக கொண்டு செல்லப்பட்ட பணமோ தெரியவில்லை. எங்கள் பெற்றோர் கடினமாக உழைத்து, சொற்ப அளவு பணமே சம்பாதிக்கிறார்கள். இதனால், பணத்தின் அருமை எங்களுக்கு தெரியும். எனவே, தவற விட்ட பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' என மாணவியர் கூறினர்.இதையடுத்து தலைமையாசிரியர் புனிதா, பாலக்கோடு போலீசாரை பள்ளிக்கு வரவழைத்தார். அவர்களிடம், சுருக்குப்பையில் இருந்த பணத்தை, மாணவியர் ஒப்படைத்தனர்.மாணவியரின் குணத்தை போலீசார் பாராட்டி, அவர்களுக்கு பேனா பரிசளித்து பாராட்டினர்.