அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவ, மாணவியர் மறியல்
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, காடுசெட்டிப்பட்டியை சுற்றியுள்ள, காடுசூடானுார், கும்மனுார், நாகனுார், பரிகம் ஆகிய மலை கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, -மாணவியர் மல்லுப்பட்டியிலுள்ள அரசு பள்ளிக்கு, காடுசெட்டிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து, தினமும் காலை, 8:30 மணிக்கு டவுன் பஸ்சில் சென்று வருகின்றனர். அதிக பயணிகளுடன் வரும் அந்த பஸ்சில் கூட்ட நெரிசலில் மாணவ, மாணவியர் பயணித்து வந்தனர். இதனால், தினமும் தனியார் வாகனங்களிலும், ஆட்டோவிலும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, காலை நேரத்தில் கூடுதல் டவுன் பஸ் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், தாமதமாக, நேற்று காலை, 10 மணிக்கு வந்த டவுன் பஸ்சால், மாணவ, மாணவியர் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், தாமதமாக வந்த அரசு டவுன் பஸ்சை, காடுசெட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, பஞ்சப்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச்செய்தனர்.