மக்களுக்காக எந்த போராட்டமும் நடத்தாமல் முதல் தேர்தலிலேயே முதல்வராக எண்ணம்
தர்மபுரி, ''கட்சி துவங்கி மக்களுக்காக எந்த போராட்டமும் நடத்தாமல், முதல் தேர்தலிலேயே முதல்வராக நினைக்கிறார்கள்,'' என, த.வா.க., தலைவர் வேல்முருகன் பேசினார்.தர்மபுரியில் நேற்றிரவு நடந்த, த.வா.க., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தமிழகத்தில், சினிமா நடிகர்கள் மீதான மோகம் தலைவிரித்தாடுகிறது. உலகின் மிகப்பெரிய நடிகரான ஜாக்கிசானை ஆங்கிலேயர்கள் மதிப்பதில்லை. இந்தியாவின் மிகப்பெரிய நடிகரான அமிதாப்பச்சன் பின்னால், வட இந்தியர்கள் செல்வதில்லை. தென்னிந்தியா வின் சிறந்த நடிகரான மம்முட்டி பின்னால் கேரள மக்கள் போவதில்லை. ஆனால், தமிழகத்தில் நகைக்கடை திறக்க நடிகை வந்தால், லட்சக்கணக்கான இளைஞர்கள் திரள்வது மிகவும் கேவலமாக உள்ளது. படத்தில், 30 ஆண்டுகளாக நடித்து படத்திற்கு, 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி, 50 வயதான பின், விக் வைத்துக்கொண்டு கட்சி துவங்கி, மக்களுக்காக எந்த போராட்டமும் நடத்தாமல், முதல் தேர்தலிலேயே முதல்வராக நினைக்கிறார்கள். நடிகனை பார்க்க போய், உயிரை விடும் சம்பவங்கள் வேதனையை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பை வடமாநிலத்தவர் தொடர்ந்து அபகரித்து வருகின்றனர். இதை தடுக்க தீவிர போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.