சாலை விரிவாக்க பணிக்கு வெட்டிய மரங்களுக்கு அஞ்சலி
சாலை விரிவாக்க பணிக்கு வெட்டிய மரங்களுக்கு அஞ்சலிதர்மபுரி, நவ. 22-தர்மபுரி மாவட்டம், பழைய தர்மபுரி முதல் பாப்பாரப்பட்டி மாநில நெடுஞ்சாலையில் இருவழி பாதை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக சாலையோர மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர். இதையறிந்த, ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட பசுமை தாயகத்தினர், மாநில துணைச் செயலாளர் மாது தலைமையில், மாவட்ட செயலாளர்கள் மேற்கு பாலச்சந்தர், கிழக்கு வீரமணி ஆகியோர், வெட்டப்பட்ட மரங்களுக்கு, மாலை அணிவித்து மலர்துாவி, அஞ்சலி செலுத்தினர். பின், தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் சென்று கோரிக்கை கடிதம் வழங்கினர்.அதில், ஒரு மரத்தை வெட்டினால், 10 மரக்கன்று நட்டு, 5 ஆண்டுகள் தொடந்து பராமரிக்க வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவு படி, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, இயற்கை வளங்களை பாதுகாக்கவும், சாலை விரிவாக்க பணிக்கு வேரோடு வெட்டி எடுக்கப்பட உள்ள மரங்களுக்கு பதிலாக, புதிய மரக்கன்றுகளை நட நெடுஞ்சாலைத்துறை தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும், என அதில் தெரிவித்துள்ளனர்.சுற்றுச்சூழல் ஆர்வலர் வணங்காமுடி, பசுமை தாயக நிர்வாகிகள் தமிழரசன், சதீஷ், மணல்முத்து, அப்பாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.