மஞ்சவாடியில் லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி, ஜன. 2---கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த நக்கல் பட்டியைச் சேர்ந்தவர் ஆகாஷ், 23; லாரி டிரைவர். இவர் பர்கூரில் இருந்து கிரானைட் கற்களை லாரியில் ஏற்றி கொண்டு, கரூர் மாவட்டம் குளித்தலையில் இறக்க அரூர்- -சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி அருகே கடந்த, 30ல் அதிகாலை சென்ற போது, பாப்பிரெட்டிப்பட்டி செங்கல்பட்டியைச் சேர்ந்த லோகநாதன்,24, சிவசங்கர்,25, சிவமணி,19, ஆகியோர் ரோட்டின் குறுக்கே படுத்துக்கொண்டு லாரியை நிறுத்தும்படி கூறினர். பின் ரோட்டில் இருந்த சிகப்பு கற்களை எடுத்து லாரி கண்ணாடியை உடைத்தனர். தகாத வார்த்தை பேசி ஆகாஷிடம் இருந்த, 2,000 ரூபாயை பறித்தனர்.பின்னர் மற்ற வாகனங்களையும் நிறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 31 ல் ஆகாஷ் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் படி லோகநாதன்,24. சிவமணி,19, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவசங்கரை தேடி வருகின்றனர்.