சின்னாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தர்மபுரி, ஜன. 4-தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து, 2024--25ம் ஆண்டிற்கு விவசாய பாசனத்திற்காக, மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று தண்ணீரை திறந்து வைத்தார்.இதில், பழைய ஆயக்கட்டு பகுதி நீர் பாசனங்களில், ஐந்து ஏரிகள் நிரப்பி, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஜன., முதல் மே.,22 வரை, 140 நாட்கள் பாசனத்திற்கு என, 395.33 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதன் மூலம், பஞ்சப்பள்ளி, பெரியனுார், குட்டப்பள்ளி, சாமனுார், அத்திமுட்டுலு, மாரண்டஹள்ளி உள்ளிட்ட, 13 கிராமங்களை சேர்ந்த பழைய ஆயக்கட்டு பரப்பு, 2,626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு, 1,874 ஏக்கர் என, 4,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். தண்ணீரை விவசாயிகள், பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி உட்பட விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.