உள்ளாட்சி, அரசு அலுவலகங்களில் தேவை பயோமெட்ரிக் வருகை பதிவு
மத்திய, மாநில அரசுகளின் ஒதுக்கீடு மூலம் பல்வேறு திட்டங்களில் மக்களுக்கான அடிப்படை, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர், தெருவிளக்கு, ரோடு, சாக்கடை போன்ற வசதிகள் மட்டுமின்றி, நீர்நிலை மேம்பாடு, எதிர்கால தேவைக்கான திட்டங்களுக்கும் இவற்றில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாவட்டத்தின் மாநகராட்சி, 3 நகராட்சி, 23 பேரூராட்சி,நகராட்சி , 14 ஒன்றியங்களில் 305 ஊராட்சிகள் உள்ளன. மாவட்ட கவுன்சில், ஒன்றிய கவுன்சில், ஊராட்சி என, 3 அடுக்கு நிர்வாகங்கள் மூலமும் திட்டங்களுக்கான ஒதுக்கீடு உள்ளது. இது தவிர நெடுஞ்சாலை, மின்வாரியம், பொது வினியோகம், வேளாண்மை, தோட்டக்கலை என அரசு துறைகளின் மூலமும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தப்படாததால் ஜன. 6 முதல் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள ஊராட்சிகள், ஒன்றியங்களின் நிர்வாகம், வட்டார வளர்ச்சி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளின் கடைநிலை ஊழியர் முதல் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் வரை உரிய நேரத்தில் அலுவலகங்களுக்கு வருவதில்லை.உயர் அதிகாரிகளும், மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், வீடியோ கான்பரன்சிங், கலந்தாய்வு கூட்டம், வெளி மாவட்ட பயிற்சி போன்ற காரணங்களை கூறி அலுவலகம் வருவதை தவிர்ப்பது, கள ஆய்வு புறக்கணிப்பு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.அரசின் பல சேவைகள் ஆன்-லைன் மயமாக்கப்பட்டபோதும் அரசு அலுவலகங்களுக்கு, பல்வேறு கோரிக்கைகள், திட்டப்பணி புகார் மனுக்களுடன் தினமும் பொதுமக்களின் வருகை வாடிக்கையாக விட்டது. பல நேரங்களில் உரிய அலுவலர், அதிகாரிகள் இருப்பதில்லை. வெகுநேரம் காத்திருந்தபோதும் , தீர்வு கிடைக்காமல் அலைக்கழிப்பிற்கு உள்ளாகும் அவலநிலை தொடர்கிறது. தரம் குறைந்த கட்டமைப்புகள், அரசு திட்டங்கள் மீது அவப்பெயர் ஏற்படுத்துபவையாக மாறி வருகின்றன. நடைபெறாத பணிகளைக்கூறி முறைகேடுகளும் அரங்கேறுகின்றன. இச்சூழலில் அதிகாரிகளின் அலட்சியம், வீண் அலைக்கழிப்பு பிரச்னைகளால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது.இதை தவிர்க்க மக்களுடன் தொடர்பில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், வருவாய், மின் வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும்.