| ADDED : ஏப் 28, 2024 05:34 AM
பழநி : பழநியில் 18 ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டெடுக்கப்பட்டது, இதில் பழநி முருகனுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழநியை சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழநிமலை பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 875 கிராம் எடை , 44 சென்டிமீட்டர் உயரம், 25 சென்டிமீட்டர் அகலத்தில் உள்ளது. இது சிவகங்கை சீமை அரசர் விசய ரகுநாத பெரிய உடையார் தேவர், பழநி மலை முருகனுக்கு வழங்கிய பூதானம் எனும் நிலக் கொடையை பற்றி குறிப்பிடுகிறது. இதில் மயில், வேல், சூரியன், சந்திரன், அரசர் உள்ளிட்ட படங்கள் வரையப்பட்டு முன் பின் என இரு பக்கங்களும் 100 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. முசுட்டாக்குறிச்சி, பெத்தனேந்தல், தேசிகனேந்தல், நாயனேந்தல், மருகதவல்லி, சின்ன குளம் ஆறு ஊர்களை வரிகள் நீக்கி திருக்கால சந்தியில், திருவிளக்கு, திருமாலை, அபிஷேகம், நெய்வேத்தியம் நடைபெற கொடை அளிக்கப் பட்டுள்ளதாக குறிப்படப்பட்டுள்ளது. அரசரின் 123 பட்டங்கள் புகழுடன் பொறிக்கப்பட்டுள்ளன. பின்பக்கம் 65 வது வரிக்கு இடையில் தெலுங்கு மொழியில் ஆறுமுக சகாயம் என்ற பெயர் உள்ளது. இது ஆய்வுக்குரியதாகும் என்றார்.